குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் மிக முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெறுகிறது.
பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த நிலையில் விரதம் தொடங்கிய பக்தர்கள் கோவிலுக்கு வந்து கடலில் நீராடி, காப்புகட்டி தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து, ஊர் ஊராகச் சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் அம்மன் பெயரில் வசூல் செய்த காணிக்கையை 10-ம் திருநாளான அக்டோபர் 2-ம் தேதி கோயில் உண்டியலில் கொண்டு சேர்ப்பார்கள்.
இதற்குப் பக்தர்களுக்கு வசதியாகக் கோயிலைச் சுற்றி தற்காலிக உண்டியல்கள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. விழாவின் முக்கிய நாளான அக்டோபர் 2 மற்றும் 3-ம் தேதியன்று பக்தர்கள் வந்து செல்ல வசதியாக அரசு சார்பில் 500-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், மருத்துவ துறை, மின்சார துறை, வருவாய்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் 2 நாள் முகாமிட்டு பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.