யூடியூபராக இருந்தால், நிச்சயம் இவரது பெயரை கேட்காமல் இருந்திருக்க முடியாது… அந்தளவுக்கு தவிர்க்க முடியாத நபர்தான் மிஸ்டர் பீஸ்ட் யூடியூப் சேனலை நடத்திவரும் ஜிம்மி டொனால்ட்சன்…. அண்மையில் அவர் வெளியிட்ட வீடியோ பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. அது என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
27 வயதான ஜிம்மி டொனால்ட்சன், மிகப்பெரிய ரொக்கப் பரிசுகளுடன் பெரிய, வியத்தகு சவால்களை எதிர்கொள்வதில் பிரபலமானவர்… அபாயகரமான சவால்கள், அதிர்ச்சி தரக்கூடிய பரிசுகள், தொண்டு முயற்சிகளுக்காகச் சர்வதேச அளவில் முத்திரை பதித்தவர். அவரது புகழ் அமேசானில் பீஸ்ட் கேம்ஸ் என்ற ரியாலிட்டி ஷோவை தொடங்கவும் தூண்டியது.
MrBeast கடந்த காலங்களில் விமர்சனங்களை எதிர்கொண்டபோதிலும், அண்மையில் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாற்காலியில் கை, கால்கள் கட்டப்பட்ட ஸ்டண்ட் கலைஞர் ஒருவர், தீப்பிடித்து எரியும் கட்டடத்தில் இருந்து தப்பிக்கும் சவாலான போட்டி இணையத்தை ஆக்கிரமித்தது. 4 கோடியே 43 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை கொடுக்கும் வீடியோதான் என்றாலும், உயிருக்கு ஆபத்தானது என்பதால் விமர்சனங்களை எதிர்கொண்டது. 5 லட்சம் டாலருக்கு நீங்கள் இறக்கும் அபாயம் உள்ளதா? என்ற தலைப்பிடப்பட்ட அந்த வீடியோவில், எரிக் என்ற ஸ்டண்ட் கலைஞர், ஏழு மரணப் பொறிகளை கடக்க தயாரா என்று மிஸ்ட் பீஸ்ட் சவால் விடுகிறார்.
வீடியோ தொடங்கியதும், இந்த மனிதன் உண்மையில் எரியும் கட்டடத்தில் இருக்கிறார் என்று கூறுகிறார் மிஸ்டர் பீஸ்ட்… ஒரு பயிற்சி பெற்ற ஸ்டண்ட்மேன் என்று வலியுறுத்தும் எரிக் என்பவர், எரியும் கட்டடத்திற்குள் ஒரு நாற்காலியில் கட்டப்பட்டுள்ளார். அவருக்கு முன்னால் இந்திய மதிப்பில் 4.40 கோடி ரூபாய் ரொக்கம் உள்ளது. சவால் தொடங்கியதும், எரிக் தன்னை விடுவித்துக் கொண்டு 2 கோடியே 21 லட்சம் ரூபாய் உடன் வெளியேறினார்.
எனினும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைப்பதற்குள் அவரது காலணிகள் சிறிது நேரத்தில் தீப்பிடித்தன வீடியோ பாதுகாப்பாகப் படமாக்கப்பட்டது என்று உறுதியளித்திருந்தாலும், அந்தச் சவால் மிகையாகச் செல்கின்றனவா என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். பீரங்கியில் இருந்து வெடிக்கச் செய்வது முதல் நெருப்பு வளையங்கள் 7 மரணப் பொறிகள் இருந்தாலும், பலரின் இதயத் துடிப்பை எகிறச் செய்தது முதல் சவால்தான்… இந்த வீடியோ அண்மையில் யூடியூப்பில் நேரலையில் ஒளிபரப்பானது, ஏற்கனவே 44 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.
இது கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், பாதுகாப்புதான் தனது முதன்மையான முன்னுரிமை என்றும் மிஸ்டர் பீஸ்ட் பதில் அளித்துள்ளார். ஸ்டண்ட்மேன் போட்டியாளரின் பாதுகாப்பு குறித்து ஏதேனும் கவலை இருந்தால், நாங்கள் பாதுகாப்பை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம் என்பதை தாம் குறிப்பிட விரும்புதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு சவாலும் பல ஸ்டண்ட்மேன்களால் சோதிக்கப்பட்டது என்றும், தீயணைப்பு வீரர்கள், டைவர்ஸ், ஒரு ஆம்புலன்ஸ் மற்றும் ஒரு தீயணைப்பு வண்டி உள்ளிட்ட முழு மீட்புக் குழு தயார் நிலையில் எப்போதும் இருந்ததாக மிஸ்டர் பீஸ்ட் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஒரு தொழில்முறை தீ விபத்து குழுவினரின் உதவியோடு அமைக்கப்பட்டுள்ள இந்த மரணப் பொறி எவ்வித ஆபத்துக்கும் வழிவகுக்கவில்லை என்றும் உறுதிபடக் கூறியிருக்கிறார். சரி விமர்சனங்களுக்குச் சொந்தக்காரரான அவர் யார் என்பதை தற்போது பார்க்கலாம்…
1998ம் ஆண்டு அமெரிக்காவின் வட கரோலினாவில் பிறந்த ஜிம்மி டொனால்ட்சன் என்பவர்தான், ரசிகர்களால் மிஸ்டர் பீஸ்ட் என்று அழைக்கப்படுகிறார். 13 வயதில் “MrBeast 6000” என்ற யூடியூப் சேனலைத் தொடங்கிய இவர், Video games, Funny games, Reaction வீடியோக்களை பதிவிட்டு படிப்படியாக வளர்ந்தவர். 2016 இல் கிரன்வில் கிறிஸ்டியன் அகாடமியில் பட்டம் பெற்ற பின்னர், சிறிது காலம் கல்லூரியில் பயின்றார். ஆனால், முழுநேரமாக Content creator ஆக மாற வேண்டும் என்பதற்காக யூடியூப்பிலேயே கவனம் செலுத்த தொடங்கினார்.
2017ம் ஆண்டில் “I Counted to 100,000” என்ற பெயரில் மிஸ்டர் பீஸ்ட் வெளியிட்ட வீடியோ 21 மில்லியன் பார்வைகளை கடந்து அவரைப் பிரபலமாக்கியது. மற்றவர்களுக்குப் பரிசு தருவது போன்ற அவரது வீடியோக்கள் உலகம் முழுவதும் பிரபலமடைந்தன. அண்மையில் யூடியூபில் 40 கோடி சந்தாதார்களை பெற்ற முதல் யூடியூபர் என்ற சாதனையைப் படைத்திருந்தார் மிஸ்டர் பீஸ்ட் சேனலை நடத்திவரும் ஜிம்மி டொனால்ட்சன்.
யூடியூப் சேனல்களால் உயரத்தை தொட்டிருக்கும் ஜிம்மி டொனால்ட்சனின் தற்போதைய சொத்துமதிப்பு 8300 கோடியாம். எவ்வித பரம்பரை சொத்தும் இல்லாமல், இவையனைத்தையும் சுயமாகவே சம்பாதித்திருக்கிறார் என்பது பலரையும் பிரமிக்க வைத்துள்ளது.அதுமட்டுமின்றி 30 வயதுக்குட்பட்ட உலகின் இளம் வயது கோடீஸ்வரர்களின் 8வது கோடீஸ்வரர் என்ற அங்கீகாரத்துக்கும் சொந்தக்காரர்தான இந்த மிஸ்டர் பீஸ்ட்.
















