தேனி மாவட்டம் நரியூத்து மலை கிராமத்தில் 80 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ள சாலையைச் சீரமைக்கவிடாமல் வனத்துறையினர் தடுத்து வருவதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
நரியூத்து மலை கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குச் செங்குளம் முதல் மூலக்கடை வரை செல்லும் சேதமடைந்த சாலையைப் புதுப்பிக்க தமிழக அரசு 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.
அதன்படி கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நரியூத்து சாலையைப் புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது. அப்போது அதில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம், கண்டமனூர் வனச்சரகத்திற்குக்குள் வருவதாகக் கூறி சாலை அமைக்கும் பணியை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில் மீண்டும் சாலை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மாநில அரசைக் கண்டித்து கிராமம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
மேலும், சாலை அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆதார், ரேஷன் அட்டை உள்ளிட்டவற்றை அரசிடமே ஒப்படைப்போம் எனவும் கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.