செங்கம் அருகே கடன் தவணையை கட்ட தாமப்படுத்தியதால் இரவு நேரத்தில் குடும்பத்தினரை வெளியேற்றி வீட்டுக்குப் பூட்டு போட்டுத் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த நந்திமங்கலம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான அம்பிகாபதி என்பவர் மனைவி மற்றும் 4 பெண் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.
பெண் பிள்ளைகளின் கல்வி செலவுக்காகத் தனியார் நிதி நிறுவனத்தில் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்றுள்ளார்.
6 மாதங்கள் தவணையில் 16 மாதங்கள் கட்டிய நிலையில், குடும்ப கஷ்டம் காரணமாகக் கடந்த 2 மாதங்களாக அம்பிகாபதி தவணை தொகையைக் கட்ட தாமதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
தவணை தொகையைக் கட்டுமாறு பலமுறை தொந்தரவு செய்து வந்த நிதி நிறுவன ஊழியர்கள், இரவு வீட்டுக்கு வந்து அம்பிகாபதி மற்றும் அவரது குடும்பத்தினரை வெளியேற்றிப் பூட்டு போட்டுள்ளனர்.
மேலும், குடும்பத்தினரை கைக்கட்டி நிற்குமாறு அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், தனியார் நிதி நிறுவன ஊழியர்களிடம் இருந்த சாவியை வாங்கி வீட்டை திறந்து விட்டனர்.
மேலும், காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு போலீசார் தெரிவித்து சென்ற நிலையில், குடும்பத்தினரை வீட்டை விட்டுத் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் வெளியேற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.