நடிகர் சிவாஜி கணேசனின் 100வது பிறந்த நாளில் மற்ற நகரங்களில் உள்ள சாலைக்கும் அவரது பெயரை வைப்பது குறித்து முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளதாக நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 98வது பிறந்தநாளையொட்டி சென்னை அடையாறில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து, அமைச்சர்கள் மற்றும் சிவாஜி கணேசனின் குடும்பத்தினர் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
இதனை அடுத்து, சிவாஜி கணேசனின் மணி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரபு, சிவாஜி கணேசனின் பிறந்தநாளை அரசு விழாவாக நடத்தும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்ட அவர், மருத்துவமனையில் உள்ளவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் எனக் கூறினார்.
















