பொருளாதார நெருக்கடியால் பாகிஸ்தான் தட்டுதடுமாறி வரும் நிலையில், தற்போது வெடித்துள்ள போராட்டங்கள் நாடு முழுவதும் அசாதாரண சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் லண்டனில் உற்சாகமாக ஷாப்பிங் செய்து விடுமுறையை கழிப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
தீவிரவாதிகளை கொல்கிறோம் என்ற போர்வையில், பாகிஸ்தான் விமானப்படை நடத்திய பயங்கர தாக்குதலில் சொந்த நாட்டை சேர்ந்த 30 அப்பாவி மக்களின் உயிரை பறித்தது. இதனை ஐ.நா.சபையில் சுட்டிக்காட்டி, பாகிஸ்தான் பிரதமருக்கு சவுக்கடி பதிலை கொடுத்திருந்தது இந்தியா. இந்த சம்பவம், பாகிஸ்தான் மக்களிடையே அரசு மீதான கோபத்தை கொழுந்துவிட்டு எரியச் செய்தது.
கடையடைப்பு, போராட்டம், வன்முறை என பாகிஸ்தானின் பெரும்பாலான பகுதிகள் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின. அதன்நீட்சியாகப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் வெடித்தது. பாகிஸ்தான் அரசுக்கு எதிராகவும் 38 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் அவாமி செயற்குழு அமைப்பு சார்பில் காலவரையற்ற போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
போராட்டத்தின் தீவிரத் தன்மையை குறைக்க, நீர்த்துப்போக செய்ய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இணையதள சேவையை துண்டித்த பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரை குவித்தனர். போரட்டத்தில் வன்முறை வெடிக்க, 2 பேர் உயிரிழக்கவும் நேரிட்டது… ஒருபுறம் பொருளாதார நெருக்கடி, மறுபுறம் மக்களின் போராட்டம்எனத் தலைவலியை ஏற்படுத்த அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அங்கிருந்து நாடு திரும்பாமல் லண்டனிற்கு சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
மருத்துவ பரிசோதனைகளுக்காகவும், மன அமைதிக்காகவும் ஓய்வெடுக்கவே அவர் லண்டன் சென்றிருப்பதாக மற்றொரு தகவல் கூறுகிறது. குடும்பத்தினரோடு நேரத்தை செலவிடும் ஷெபாஸ் ஷெரீப், ஷாப்பிங் செய்யவும்,நன்றாகச் சாப்பிடுவது, ஓய்வெடுப்பது என பொழுதை கழித்து வருகிறாராம்… 74 வயதான பாகிஸ்தான் பிரதமர், கடந்த 2000ம் ஆண்டு Adenocarcinoid எனப்படும் அரிதான, ஆபத்தான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும், பல ஆண்டு சிகிச்சைக்குப் பின்னர் அவர் அதிலிருந்து மீண்டும் வந்தார் என்றும் கூறப்படுகிறது.
மருத்துவர்கள் அவரை நிதானமாகவும், மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழவும் பரிந்துரை செய்ததால்தான் லண்டன் சென்றதாக மற்றொரு அறிக்கை கூறுகிறது. பாகிஸ்தானின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ள நிலையில், இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியின் சமீபத்திய அறிக்கையில், 2026ம் ஆண்டு பாகிஸ்தானின் சராசரி பணவீக்கம் 6 சதவிகிதமாக உயரும் என எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம், பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கான வளர்ச்சி மதிப்பீடுகளையும் குறைக்கவும் வாய்ப்புள்ளது. பொருளாதார நெருக்கடி, போராட்டம், வன்முறை எனப் பாகிஸ்தான் கையறு நிலையில் உள்ள நிலையில், நாட்டின் பிரதமர் விடுமுறை எடுத்துக்கொண்டு ஷாப்பிங் செய்து ஓய்வெடுப்பது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஷெபாஸ் ஷெரீப்புக்கு அது ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை என்றே கூறப்படுகிறது.