ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா நாக்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
1925ஆம் ஆண்டு விஜயதசமி நாளன்று தொடங்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா, மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தலைமையில் நடைபெற்ற நூற்றாண்டு விழா மற்றும் விஜயதசமி விழாவில் குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த ராம்நாத் கோவிந்த், வளாகத்தில் உள்ள ஆர்எஸ்எஸ் நிறுவனர் கே.பி. ஹெட்கேவார் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் அமைப்பு தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து, விஜயதசமியையொட்டி வாள் உள்ளிட்ட ஆயுதங்களுக்கு குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆகியார் மலர்தூவி சிறப்பு பூஜை செய்தனர்.
இதனை அடுத்து, ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலக மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொடியை ஏற்றி வைத்த பிறகு அமைப்பின் பிராத்தனை பாடல் ஒலிக்கப்பட்டது. நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ருபூமே… என தொடங்கும் பாடலை ஆர்எஸ்எஸ் தலைவர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் பாடி பிரார்த்தனை செய்தனர்.
அதைத்தொடர்ந்து, திறந்த மைதானத்தில் ஸ்வயம் சேவகர்களின் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஸ்வயம் சேவகர்கள் ஆர்.எஸ்.எஸ் சீருடையில் வீறுநடை போட்டனர்.
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கானா, தென்னாப்பிரிக்கா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.