உலகளாவிய கவலைகளுக்கு தீர்வு காண உலகம், இந்தியாவை நோக்கிப் பார்க்கிறது என்றும், இந்தியா முன்மாதிரியாக இருந்து சிறந்த வழியைக் காட்ட வேண்டும் என்று பிரபஞ்சம் விரும்புகிறது எனவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பஹல்காமில் அப்பாவி மக்களை கொன்ற பயங்கரவாதிகளுக்கு, இந்தியா தக்க பதிலடி கொடுத்தது என தெரிவித்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு பயங்கரவாத அமைப்புகளை தடுத்து வருவதாக கூறிய அவர், பாகிஸ்தானின் பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வெகுவாக பாராட்டினார்.
அமெரிக்காவின் வரிவிதிப்பு கொள்கை அனைவரையும் பாதித்து வருகிறது என குறிப்பிட்ட மோகன் பகவத், மத்திய அரசின் சுதேசி, சுயசார்பு இந்தியா திட்டங்களை மக்கள் ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்தியாவின் அண்டை நாடுகள் பெரும் கொந்தளிப்பில் இருக்கிறது என்றும், நேபாளம் மற்றும் வங்கதேசத்தில் மக்கள் புரட்சி ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
அரசு மக்களை சார்ந்திருப்பது அவசியம் எனக்கூறிய மோகன் பகவத், மக்களுக்கு தேவையான திட்டங்களை அரசு வகுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், இந்து மதம் உலகத்திற்கு நிறைய கொடுத்துள்ளது என்றும், இந்து தர்மத்தை புகழ்ந்தும் மோகன் பகவத் பேசினார்.