விஜயதசமி தினத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
சரஸ்வதிக்கு உகந்த நாளான விஜயதசமியன்று குழந்தைகள் கல்வி பயில தொடங்கினால் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. அந்த வகையில் விஜயதசமியை முன்னிட்டு சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில், குழந்தைகள் கல்வியை தொடங்கும் நிகழ்வான வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் தங்களின் குழந்தைகளின் பெயரை அரிசியில் எழுத வைத்த பெற்றோர், நெல் மணிகளால் அவர்களின் நாவில் எழுதி கல்வி போதனை வழங்கினர்.
இதேபோல, சேலத்தில் உள்ள ஐயப்பா ஆசிரமத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு தங்கள் குழந்தைகளுடன் சென்ற ஏராளமானோர், அவர்களை பெற்றோர் மற்றும் உறவினர்கள் மடியில் அமர வைத்து, தமிழ் எழுத்துக்களால் நாவில் எழுதி கல்வியை புகட்டினர்.
பின்னர் ஒரு தட்டில் பரப்பி வைக்கப்பட்ட அரிசியில் குழந்தைகள் கைவிரலால் அ என எழுத பெற்றோர் கற்று கொடுத்தனர்.
திருச்சி கண்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் விஜயதசமியையொட்டி வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமானோர் தங்கள் குழந்தைகளுடன் வந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
நல்ல கல்வியை கற்க வேண்டும், வாழ்க்கையில் மேலோங்க வேண்டும், கடவுளின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்க வேண்டும் என எண்ணி குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நடத்தினர்.