ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு சென்னை ஐயப்பன்தாங்கலில் பேரணி நடத்திய 39 ஆர்எஸ்எஸ் சேவகர்களைத் திமுக அரசின் ஏவல்துறை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், பொதுமக்களுக்கு எந்தவொரு இடையூறுமின்றி, பல ஆண்டுகளாக பயிற்சி நடைபெறும் மைதானத்தில் அமைதி முறையில் பேரணி நடத்தக் கூட திராவிட மாடல் ஆட்சியில் இடமில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தை முடக்க துரிதமாக இயங்கும் அறிவாலய
அரசின் இரும்புக்கரம், குற்றங்களைத் தடுக்கையிலும் குற்றவாளிகளைப் பிடிக்கும்போதும் மட்டும் துருப்பிடித்து இருப்பது ஏன்? என்றும் வினவியுள்ளார்.
தன்னலம் கருதாது தேச நலப்பணிகளில் நூறாண்டு காலமாகத் தன்னை இணைத்துக் கொண்டு சேவையாற்றும் தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது என்பதைத் திமுக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும், . உடனடியாக, கைது செய்த அனைத்து ஆர்எஸ்எஸ் சேவகர்களையும் விடுவிக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.