உத்தராகண்ட் மாநிலம், ஹரித்துவாரில் மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவர் தரையில் அமர்ந்து குழந்தை பெற்றெடுத்த அவலம் அரங்கேறியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஹரித்துவாரில் உள்ள மருத்துவமனைக்குப் பிரசவ வலியுடன் கர்ப்பிணி ஒருவர் சென்றார். அவருடன் உறவுக்கார பெண் ஒருவர் மட்டும் துணைக்காக வந்திருந்தார்.
அவர்கள் ஏழ்மையான பின்னணியை சேர்ந்தவர்கள் என்பதால், அந்த பெண்ணுக்குப் பிரசவம் பார்க்க மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் அங்கிருந்து நகர்ந்து செல்ல முடியாததால் கர்ப்பிணி பெண் தரையிலேயே அமர்ந்து குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டார்.
இதனிடையே கர்ப்பணி தரையில் அமர்ந்து பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம்குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், சம்பவத்தின்போது பணியில் இருந்த ஒப்பந்த மருத்துவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.