மடகாஸ்கர் அதிபர் தனது அரசாங்கத்தையே கலைத்தும் இளைஞர்களின் போராட்டம் தொடர்வதால் கலவரபூமியாகக் காட்சியளிக்கிறது.
ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் நீண்ட காலமாக நிலவி வரும் கடுமையான மின்வெட்டு மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதைக் கண்டித்து, கடந்த வாரம் தலைநகர் அண்டனானரிவோவில் இளைஞர்கள் மாபெரும் போராட்டத்தைத் தொடங்கினர்.
மின்வெட்டால் சலித்துவிட்டோம் என்ற பெயர்களில் சமூக வலைதளங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தப் போராட்டம், கென்யா மற்றும் நேபாளத்தில் நடைபெற்ற இளைஞர் போராட்டங்களைப் பிரதிபலித்தது.
அமைதியான முறையில் தொடங்கிய இந்தப் போராட்டம், நாளடைவில் வன்முறையாக மாறி அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா தனது அரசாங்கத்தையே கலைத்தார்.
இருப்பினும் இளைஞர்களின் போராட்டம் தொடர்வதால் அவர்களைக் கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசிப் போலீசார் கலைக்க முயற்சித்தும் இளைஞர்களின் போராட்டம் வலுப்பெற்றுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.