விஜயதசமியையொட்டி சென்னையின் பல்வேறு பகுதிகளில் தினமலர் நாளிதழ் மற்றும் வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் வித்யாரம்பம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. மழலைகளின் பிஞ்சு விரல்களைப் பிடித்து சிறப்பு விருந்தினர்கள் அரிச்சுவடி எழுத வைத்த காட்சி பெற்றோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ஒரு குழந்தையின் முதல் பிறந்தநாள், முதல் மழலை மொழி, முதல் நடை என ஒவ்வொரு விஷயமும் பெற்றோருக்கு மறக்க முடியாத நினைவாகவே இருக்கும். அந்த வகையில் கல்வியின் முதல் படியாகக் கருதப்படும் அரிச்சுவடி நிகழ்ச்சியும் அமைய வேண்டும் என்ற நோக்கில், தினமலர் நாளிதழ் மற்றும் வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் சிறப்பு வித்யாரம்பம் நடத்தப்பட்டது.
வடபழனி முருகன் கோயிலில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற ஐஐடி இயக்குனர் காமகோடி, வடபழனி முருகன் கோயில் தக்கார் ஆதிமூலம், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், கல்வியாளர் சுப்பிரமணியன், மருத்துவர் தீபா ஹரிஹரன், காவல்துறை உயரதிகாரி அன்பு, மருத்துவர் செங்கோட்டுவேலு, மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவச்சலம், மருத்துவர் ஜெயராஜா, தொழிலதிபர் வம்சி, தகவல் அறியும் உரிமை ஆணையர் திருமலை மூர்த்தி உள்ளிட்டோர் குழந்தைகளின் கைகளைப் பிடித்து நெல்மணிகளில் “அனா ஆவன்னா” எழுத வைத்தனர்.
வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, கல்வி சார்ந்த உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்குத் தமிழ் ஜனம் தொலைக்காட்சி Media partner ஆக இணைந்து செயல்பட்டது. இதேபோல் தாம்பரம் ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தினமலர் நாளிதழ் மற்றும் வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில், எழுத்தாளர் ஆதலையூர் சூரியகுமார், கல்வியாளர் ராமசுப்ரமணியன், வில்லிசைக் கலைஞர் பாரதி திருமகன், ஆன்மிக பாடகர் வீரமணிராஜூ, சங்கரா பள்ளி தாளாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் குழந்தைகளின் பிஞ்சு விரல் பிடித்து, ‛அ’ னா, ‛ஆ’ வன்னா எழுத வைத்தனர். சென்னை அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியில், தினமலர் மாணவர் பதிப்பான ‘பட்டம்’ இதழும், ‘வேலம்மாள் கல்வி நிறுவனமும் இணைந்து நடத்திய வித்யாரம்பம் நிகழ்ச்சியில், பேராசிரியர் ஞானசம்பந்தன், மருத்துவர் சீனிவாசன், ஆன்மீக சொற்பொழிவாளர் நாகை முகுந்தன், எழுத்தாளர் பிரபு சங்கர், ஓய்வு பெற்ற டிஐஜி கே.வி.கே ஸ்ரீராம், திரைப்படக் கலைஞர் உமா ஐயர், பின்னணி பாடகர் ஸ்ரீவர்த்தினி ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து குழந்தைகளுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, கல்வி சார்ந்த உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.