கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்ற வேண்டாம் என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எச்சரித்தனர்.
கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரியும், தவெகவை தடை செய்யக் கோரியும், அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு நிபந்தனைகள் விதிக்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட 7 மனுக்களும் நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பொதுக்கூட்டங்களுக்கு நிபந்தனைகள் விதிப்பது தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையின் போது, விஜய் தாமதமாக வந்ததே இத்தகைய பெருந்துயருக்கு காரணம் என்ற வாதம் மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி கோரும் அரசியல் கட்சிகள், அடிப்படை வசதிகளை செய்திருப்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்ததுடன், இது தொடர்பான மனுக்கள் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அவற்றுடன் சேர்த்து இந்த மனுக்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, 3 மனுக்களையும் முடித்து வைத்தனர்.
பின்னர் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குக் கூடுதல் நிவாரணம் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், கரூர் சம்பவத்தை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவை விசாரித்தனர்.
அப்போது, ஒரே நாளில் உடற்கூராய்வு நடந்தது குறித்து மனுதாரர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது, உயிரிழந்தவர்களின் குடும்பங்களை எண்ணிப் பாருங்கள் எனக் கடிந்த நீதிபதிகள், கரூர் சம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், தற்போது சிபிஐக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்ற வேண்டாம் எனவும்கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.