கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த விவகாரத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோரின் முன்ஜாமின் மனுக்களை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
இந்த முன்ஜாமின் மனு மீதான விசாரணை நீதிபதி ஜோதிராமன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, தொண்டர்களை கொல்ல வேண்டுமென்ற எண்ணமெல்லாம் தங்களுக்கு கிடையாது என்றும், நடந்தது ஒரு விபத்து, திட்டமிட்டு காலதாமதம் செய்யவில்லை என்ற வாதம் மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்டது.
மேலும் மற்ற இடங்களில் நடந்த கூட்டத்தைக் கருத்தில் கொண்டு, இங்கும் எவ்வளவு கூட்டம் வரும் என்பதை காவல்துறை கணித்திருக்க வேண்டும் என்றும், கரூரில் ஏற்பட்ட கூட்டநெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையினர் தவறிவிட்டதாகவும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், எந்தச் சாட்சியும், ஆவணங்களும் இல்லாமல் இவ்வாறு குற்றம் சுமத்துவதை ஏற்க இயலாது எனக் கூறினார். மேலும், விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், இருவருக்கும் முன்ஜாமின் வழங்கக் கூடாது என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்தார்.
இதுமட்டுமின்றி, விஜயின் தாமதமே 41 உயிர்களை பலிகொண்டதாகவும் அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி, முதலில் தீர்ப்பை ஒத்திவைத்து, மாலையில் தீர்ப்பு வழங்கப்படும் எனக்கூறினார் பின்னர் மாலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இருவரின் முன்ஜாமின் மனுக்களைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.