திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களும், நோயாளிகளும் அவதி அடைந்துள்ளனர்.
வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆம்பூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது.
அதன் ஒரு பகுதியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் 2 அடிக்கும் மேல் மழை நீர் தேங்கியது. 23 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு புதிதாகத் திறக்கப்பட்ட மருத்துவமனையில் மழைநீர் தேங்கிய சம்பவம் அதிர்ச்சியை தருவதாகத் தெரிவித்த அப்பகுதியினர், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மழை நீரை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை வைத்தனர்.
இதற்கிடையே வாணியம்பாடியில் உள்ள ஏரி கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் இந்த அளவுக்கு மழை நீர் தேங்கியுள்ளது எனவும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.