மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அடுத்த திருமால் கிராமத்தில், மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட கல்குவாரி உரிமத்தை ஆட்சியர் ரத்து செய்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் எனக் கிராம மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
கல் குவாரிக்கான உரிமத்தை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உட்பட நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கைது செய்யப்பட்டனர். இந்தப் போராட்டத்தின் போது 5 பெண்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு நிலவியது.
கைதுச் செய்யப்பட்டவர்கள் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலையில் அவர்களை காவல்துறையினர் விடுவித்த நிலையில், மண்டபத்தை விட்டு வெளியேற மறுப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்ட டிஆர்ஓ அன்பழகன் , மதுரை ஆர்டிஓ கருணாகரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.