காரைக்கால் துறைமுகத்தில் இந்திய கடலோர காவல் படை சார்பில் அக்சர் கடற்படை ரோந்து கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது.
அக்சர் ரோந்து கப்பலானது கடலோர ரோந்து, கடத்தல் எதிர்ப்பு, கடற்கொள்ளை எதிர்ப்பு, தேடல் மற்றும் மீட்பு பணிகளுக்காக நவீன தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திப்த்தி மோஹில் சௌலா, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அக்சர் கப்பல் சேவையை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
அப்போது தண்ணீர் விசிறியடித்து கடற்படையினர் கப்பலுக்கு வரவேற்பு அளித்தனர். இதனைதொடர்ந்து பேசிய பாதுகாப்புத்துறை கூடுதல் செயலாளர் திப்த்தி மோஹில் சௌலா, 51 மீட்டர் நீளமும், 320 டன் எடையும் கொண்ட இக்கப்பல் ஒரு மணி நேரத்திற்கு 27 நாட்டிகல் கடல் மைல் தூரத்திற்கு செல்லும் திறன் கொண்டது எனக் கூறினார். இது இந்திய கடலோர பாதுகாப்பில் முக்கிய மைல் கல்லாக விளங்கும் எனவும் தெரிவித்தார்.