கோவை விமான நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரனின் பெயரை சூட்ட வேண்டும் என மத்திய அரசுக்குப் புதிய நீதிக்கட்சி தலைவர் A.C.சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரனின் பிறந்த நாளை ஒட்டி ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள அவரது திரு உருவ சிலைக்குப் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், திரைப்பட இயக்குநர் R.K.செல்வமணி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.சி.சண்முகம் சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் நினைவை போற்றும் வகையில் 100 ரூபாய் நாணயத்தை வெளியிட வேண்டும் எனவும், கோவை விமான நிலையத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் எனவும் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் உள்ள காந்தி மண்டபத்தில் அனைத்து தலைவர்களுக்கும் சிலை இருக்கும் போது திருப்பூர் குமரனுக்கும் சிலையை நிறுவத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.