முதலமைச்சர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான சென்னை கொளத்தூரில் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, கொளத்தூர் திருப்பதி நகர் பிரதான சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் புகார் வந்துள்ளது.
இதனையடுத்து அடைப்பை நீக்குவதற்காக சில தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட நிர்வாகம் அனுப்பியுள்ளது. இந்நிலையில், கழிவுநீர் கால்வாய்க்குள் இறங்கிய குப்பன் என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற சக தொழிலாளர்கள் ஹரி மற்றும் சங்கர் ஆகியோரும் விஷவாயு தாக்கி பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், ஹரியின் நிலைமை மோசமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதனிடையே, விஷவாயு தாக்கி உயிரிழந்த குப்பனின் உடல் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கால்வாயை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் முதல் அனைவரும் கூறிவரும் நிலையில், முதலமைச்சரின் சொந்த தொகுதியிலேயே கால்வாய்க்குள் இறங்கிய தொழிலாளர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.