வடலூரில் வள்ளலாரின் 202-வது அவதார திருநாள் விழா கோலாகலமாக நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள மருதூர் என்ற கிராமத்தில் பிறந்த ராமலிங்க அடிகளார், குழந்தை பருவத்திலேயே கடவுள் மீது பக்தி கொண்டு கடவுள் குறித்த பாடல்களை பாடி வந்தார்.
பின்னர், வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், சமரச சுத்த சன்மார்க்க சத்திய தர்மசாலை, சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை உள்ளிட்டவைகளை நிறுவி சன்மார்க்க நெறியை பரப்பி வந்தார்.
1874ஆம் ஆண்டு வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள சித்தி வளாகத் திருமழிகையில் இறைவனோடு ஜோதி ரூபமாக கலந்ததாக கூறப்படுகிறது.
வள்ளலாரின் பிறந்த நாளை அவதாரத் திருநாளாக சன்மார்க்க அன்பர்கள் கொண்டாடி வரும் நிலையில், வடலூரில் உள்ள சத்திய ஞான சபையில் 202வது அவதார திருநாள் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் சேகர் பாபு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சன்மார்க்க கொடியை ஏற்றி வைத்தனர். இதனை தொடர்ந்து, வள்ளலாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சின்னக்காவனம் பகுதியில் உள்ள வள்ளலார் தாயாரின் இல்லத்தில் 202வது அவதார திருநாள் கொடியேற்ற நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.
சின்னக்காவனம் கிராமத்தில் உள்ள இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடி மரத்தில் சன்மார்க்க கொடியை அன்பர்கள் ஏற்றி வைத்த நிலையில், அகவல் பாராயணம் பாடப்பட்டது. இதனை தொடர்ந்து, வள்ளலாரின் ஜோதி தரிசனமும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.