மூணாறு அருகே தமிழக சுற்றுலா பயணிகளை, போதை கும்பல் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலமான மூணாறுக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், திருச்சியைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் தனது நண்பர்களுடன் மூணாறுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
மூணாறு மலைப் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த காருக்கு வழிவிடவில்லை எனக்கூறி அப்பகுதியைச் சேர்ந்த கவூசிக், அருண், சுரேஷ் ஆகியோர் தமிழக சுற்றுலா பயணிகள் சென்ற காரை தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
மதுபோதையில் இருந்த 3 இளைஞர்களும், கார் கண்ணாடியை உடைத்து, தமிழக இளைஞர்களை விரட்டி சென்று தாக்கியுள்ளனர். இதனைத் தட்டிக்கேட்ட தோட்ட தொழிலாளர்களையும் போதை இளைஞர்கள் மிரட்டியுள்ளனர்.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, போதையில் தகராறில் ஈடுபட்ட 3 இளைஞர்களையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.