திருமுல்லைவாயல் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைத்திருந்த வாகனங்களை இளைஞர்கள் கஞ்சா போதையில் பட்டா கத்தியால் தாக்கி சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருமுல்லைவாயல் அருகே உள்ள பெரியார் நகரில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில், அப்பகுதியில் வசிக்கும் மக்கள், தங்கள் வாகனங்களை வீட்டின் வெளியே நிறுத்தி வைப்பதை வழக்கம் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் அதிக சத்தம் கேட்டதால் அச்சமடைந்த பொதுமக்கள் வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது, சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த வாகனங்கள் சேதமடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
நள்ளிரவு நேரத்தில் கஞ்சா போதையில் சுற்றித்திரிந்த இளைஞர்கள், வாகனங்களை தேசப்படுத்தியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அதைத் தொடர்ந்து, அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.