வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் காணாமல் போனதாக கூறப்பட்ட சிங்கத்தை, ட்ரோன் கேமராக்கள் மூலம் பூங்கா ஊழியர்கள் தேடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள லயன் சபாரியில், மொத்தம் 7 சிங்கங்கள் உள்ளன. இதில் ஷேரு என்ற சிங்கம் சபாரி பகுதியில் திறந்தவெளியில் விடப்பட்டது. ஆனால், உணவு சாப்பிட யார்டிற்கு திரும்பி வராததால், ஷேரு சிங்கத்தை பூங்கா ஊழியர்கள் டிரோன் கேமராக்கள் மூலம் தேடினர்.
அப்போது அதே பகுதியில் சிங்கம் உலா வருவதை கண்டுபிடித்த ஊழியர்கள் மூன்று நாட்களுக்கு பின்னர் தானாகவே வந்துவிடும் என்று கூறியுள்ளனர்.
லயன் சபாரி உள்ள பகுதி முழுவதும் பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால், சிங்கம் வெளியேற வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லயன் சபாரி நிறுத்தப்பட்டுள்ளது.