நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் சரணாலயம் அமைக்கின்றோம் என்ற பெயரில் பழங்குடியின மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய துணை தலைவர் பிருந்தா காரத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், அகில இந்திய துணை தலைவர் பிருந்தா காரத் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய பிருந்தா காரத், வனப்பகுதியில் வசித்து வரும் பழங்குடியினர்களின் உரிமைகளும், நிலங்களும் பறிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டினார். தமிழகத்தில் மலைவாழ் மக்களின் உரிமைகள் அமல்படுத்தப்படவில்லை என்றும், 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் நில உரிமைகள் கேட்டு அளித்த மனுக்களில் பாதிகூட அரசால் ஏற்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
மலைவாழ் மக்களுக்கான சட்டங்களையும், உரிமைகளையும் அமல்படுத்தி பழங்குடியினர்களுக்கு நீதி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், மலைவாழ் மக்களினுடைய அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருவதாகப் பிருந்தா காரத் குற்றம்சாட்டினார்.
இதனை தொடர்ந்து பேசிய சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், தமிழகத்தில் புதிதாக ஒருவர் சனிக்கிழமை மட்டும் வேலை செய்யும் வகையில் கட்சியைத் தொடங்கி உள்ளதாகத் தவெக தலைவர் விஜய்யை மறைமுக விமர்சித்தார். கேரளாவை போன்று மலை புலையர் சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், மலைப் புலையர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு பதிலாக ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்க்க அதிகாரிகள் தவறாகக் கடிதம் அனுப்பியுள்ளதாகவும், இந்த விவகாரம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் சண்முகம் கூறினார்.