கடல் மட்டத்தில் இருந்து மிகவும் உயரமான லடாக்கின் மிக் லா பாஸ் பகுதியில் 52 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைத்து இந்திய ராணுவம் உலக சாதனை படைத்துள்ளது.
இந்திய ராணுவத்தின் சாதனைகள் எண்ணிலடங்காதவை. ராணுவத்தினரின் வீரமும் தீரமும் இந்தியாவின் பெருமைக்கு மகுடம் சேர்ப்பதாக இருந்து வரும் நிலையில், தற்போது புதிய கின்னஸ் சாதனை ஒன்றை படைத்து, இந்தியாவை பெருமையடையச் செய்துள்ளனர்.
இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவான எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு (Border Roads Organisation), உலகிலேயே மிக உயரமான இடத்தில் மோட்டார் சாலையை நிறுவிக் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
அவர்கள் கடல் மட்டத்தில் இருந்து 19,400 அடி உயரத்தில் இருக்கும் லடாக்கின் மிக் லா பாஸ் பகுதியில் மோட்டார் சாலையை அமைத்துள்ளனர்.
இதன் மூலம், உம்லிங்-லா பகுதியில் 19,024 அடி உயரத்தில் சாலை அமைத்து 2021-ல் செய்த தனது முந்தைய கின்னஸ் சாதனையை BRO அமைப்பு முறியடித்துள்ளது.