திமுக அரசைக் கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
திருச்சி மன்னார்புரம் பகுதியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பாகக் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட தலைவர் காமராஜர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஒப்பந்த பணியாளர்களுக்கு 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஓய்வு பெற்றுள்ள பணியாளர்களுக்கும் உடனடியாக ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தலைவர் காமராஜ், தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள்மீது அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டினர்.
பெண்கள் பணிபுரியும் இடங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக் குற்றம்சாட்டினார். இன்னும் இரண்டு நாட்களுக்குள் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்தார்.