மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் சிரப் உட்கொண்ட 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்ததையடுத்து, நாடு முழுவதும் ஒரு முக்கிய முடிவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் சிரப் கொடுப்பதைத் தவிர்க்குமாறு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சமீபத்தில், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இருமல் சிரப் குடித்த 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தன. இதுகுறித்து உரிய விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC), தேசிய வைராலஜி நிறுவனம் (NIV) மற்றும் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) ஆகியவற்றின் கூட்டுக் குழு விசாரணையை நடத்தியது.
பல இருமல் மருந்துகளின் மாதிரிகளையும் சேகரித்து ஆய்வு செய்த விசாரணைக் குழுவினர், அந்த மருந்துகளில், சிறுநீரகங்களைப் பாதிக்கும் டைதிலீன் கிளைக்கால் அல்லது எத்திலீன் கிளைக்கால் போன்ற ஆபத்தான இரசாயனங்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
மூன்று மாதிரிகளை எடுத்து மத்தியப் பிரதேச மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நடத்திய பரிசோதனையிலும் நச்சுத் தன்மையுடைய ரசாயனங்கள் எதுவும் இல்லை என்பது கண்டறியப் பட்டுள்ளது. ராஜஸ்தானில் இருமல் சிரப் குடித்து இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து நடத்திய பரிசோதனையிலும் இருமல் சிரப்பில் புரோபிலீன் கிளைக்கால் இல்லை என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
லெப்டோஸ்பிரோசிஸுடன் தொடர்புடைய ஒரு தொற்று காரணமாகக் குழந்தைகள் இறந்திருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரிலும் தண்ணீர் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன இந்தச் சூழலில், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளி மருந்துகளை வழங்கக் கூடாது என்றும், பெரிய குழந்தைகள் கவனமாக மருத்துவ மேற்பார்வையின் கீழ் மட்டுமே மருந்து வழங்கப் பட வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
மேலும், குழந்தைகளில் இருமல் சிரப்களின் பாதுகாப்பான பயன்பாடுகுறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சுகாதார சேவைகள் இயக்குநர்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சுற்றிக்கை அனுப்பப் பட்டுள்ளது. அதில், குழந்தைகளுக்கு வரும் பெரும்பாலான சளி மற்றும் இருமல், மருத்துவ உதவி இல்லாமல் தானாகவே குணமாகும் என்றும், பெரும்பாலும் மருந்து இல்லாமல் சரியாகிவிடும் என்பதைக் குறிப்பிடப் பட்டுள்ளது.
ஓய்வு மற்றும் ஆதரவான கவனிப்பு ஆகியவையே முதல் கட்ட சிகிச்சையாக இருக்க வேண்டும் என்றும் குழந்தைகளைப் பராமரிக்கும்போது வீட்டு வைத்தியம் மற்றும் மருந்து அல்லாத முறைகளை முதலில் முயற்சிக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
மாநில மற்றும் யூனியன் பிரதேச சுகாதாரத் துறைகள், மாவட்ட சுகாதார அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் இந்த ஆலோசனையைச் செயல்படுத்தி, அரசு மருந்தகங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் முழுவதும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அந்தச் சுற்றிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் பிரவீன் சோனியிடமிருந்து காய்ச்சல் மற்றும் இருமலுக்கு சிகிச்சை பெற்ற ஐந்து வயதுக்குட்பட்ட பல குழந்தைகளுக்குக் கடுமையான சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள் ஏற்பட்டதாக பராசியா அரசு பொது சுகாதார மையத்தின் மருத்துவ அதிகாரி டாக்டர் அங்கித் சஹ்லம் புகார் கொடுத்தார்.இதுபற்றி உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அரசு குழந்தை நல மருத்துவர் டாக்டர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படுவதற்கு முன்பு, இருமல் சிரப்பில் இப்படி கலப்படம் இருப்பதை தன்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை என்றும், கடந்த 15 ஆண்டுகளாக அதைப் பரிந்துரைத்து வருவதாகவும் டாக்டர் பிரவீன் சோனி தெரிவித்துள்ளார். இதனையடுத்து சோனியை உடனடியாக இடைநீக்கம் செய்து அம்மாநில முதல்வர் மோகன் யாதவ், உத்தரவிட்டார்.
குழந்தைகளுக்குச் சிகிச்சையளிப்பதில் கடுமையான அலட்சியம் மற்றும் முழு நேர்மையுடன் அதிகாரப்பூர்வ கடமைகளைச் செய்யத் தவறியதை மேற்கோள் காட்டி டாக்டர் பிரவீன் சோனி மீதான இடைநீக்க உத்தரவுகளைப் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வி ஆணையர் தருண் ரதி பிறப்பித்துள்ளார். கூடுதலாக, உரிமம் பெற்ற, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளைப் பரிந்துரை செய்யும் மருத்துவர்களுக்கு, சீல் செய்யப்பட்டு வரும் மருந்துகளில் உள்ள இரசாயன நச்சுத்தன்மையைக் கண்டறிய வாய்ப்பு இல்லை.
எனவே, கலப்பட மருந்துகளால் உயிரிழப்பு ஏற்படும் பட்சத்தில் அதற்கு மருத்துவர்களைப் பொறுப்பாக்க கூடாது என்றும் இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. மேலும், மாசுபட்ட மருந்துகளை உற்பத்தி மற்றும் விநியோகிக்கும் மருந்து நிறுவனங்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்து, அந்நிறுவன பெயர்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்றும், அந்நிறுவனங்களின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
















