எவரெஸ்ட் சிகரத்தில் டிரெக்கிங் சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பனிப்பொழிவில் சிக்கியுள்ள நிலையில், மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பனிப்பொழிவு, பனிச்சரிவு என மோசமான காலநிலை நீடிப்பதால், எஞ்சியவர்களை மீட்பது சவாலாக மாறியுள்ளது.
நேபாளம் மற்றும் சீன எல்லையில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான சிகரம்தான் எவரெஸ்ட்… இது வெண் போர்வை போர்த்தியது போன்ற அழகான பனிபடர்ந்த மலை மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட.
கடல் மட்டத்தில் இருந்து 29 ஆயிரத்து 32 அடி அதாவது 8 ஆயிரத்து 848 மீட்டர் உயரம் கொண்ட பிரமாண்ட பிரமிக்க வைக்கும் எவரெஸ்ட், மலை ஏறுபவர்களை தன்னை நோக்கி ஈர்க்கிறது. கரடுமுரடான நிலப்பரப்பு, ஆண்டு முழுவதும் வீசும் பனி, கடுங்குளிர் எனக் கடுமையான காலநிலைகளை கொண்ட எவரெஸ்ட் மலையில், அண்மையில் டிரெக்கிங் போன ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பனிப்புயலில் சிக்கிக் கொண்டனர்.
சீனாவில் 8 நாள் தேசிய விடுமுறையையொட்டி, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் எவரெஸ்ட் சிகரத்தில் டிரெக்கிங் சென்றுள்ளனர். அதன் கிழக்குப் பகுதியான கர்மா பள்ளத்தாக்கு எவரெஸ்ட்டின் அழகிய பகுதியாக அறியப்படுவதால், பெரும்பாலான மலையேறுபவர்களின் பிரதான தேர்வு இதுவாகத்தான் இருக்கும்.
துரதிருஷ்டவசமாகச் சிகரத்தின் கிழக்கே திபெத் பிராந்தியத்தில் திடீரெனப் பனிப்புயல் வீச, கர்மா பள்ளதாக்கில் பனிப்பொழிவை அதிகப்படுத்தியது… இதன் காரணமாக ஆங்காங்கே பனிச்சரிவு ஏற்படவே, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
திபெத் ப்ளூ ஸ்கை மீட்புக்குழுவுக்கு உதவிக்காக அழைப்பு வந்த நிலையில், கடும் சவாலுக்கு மத்தியில், முதற்கட்டமாக 350 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அக்டோபரில் இது போன்ற வானிலையை சந்தித்ததே இல்லை என்றும் மலையேற்ற வீரர்கள் கூறினர். ஒவ்வொரு நாளும் மழை மற்றும் பனிப்பொழிவை எதிர்கொண்டதாகவும், எவரெஸ்ட்டை பார்க்கவே முடியவில்லை என்றும் அவர்கள் தங்கள் நிலையை விவரித்தனர்.
கைவசம் இருந்த ஒரு சில கூடாரங்களில் 10-க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்ததாகவும், ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் பனியை அகற்ற வேண்டிய நிலை இருந்ததாகவும் கூறிய அவர்கள், பனியால் மூடப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில் தங்களால் தூங்கவே முடியவில்லை என்றும் கூறினர். மேலும், கடுமையான பனி காரணமாகக் கூடாரங்கள் இடிந்து விழுந்ததாகவும், சில மலையேறுபவர்கள் ஹைப்போதெர்மியா அதாவது தாழ்வெப்பநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்குள்ள நிலையைத் தெளிவுபடுத்தினர்.
அனைவரும் அனுபவம் வாய்ந்த மலையேற்ற வீரர்கள் என்றாலும், பனிப்புயலைச் சமாளிப்பது இன்னும் மிகவும் கடினமாக இருந்தது என்பதும், தாங்கள் வெளியேறியதே அதிர்ஷ்டம் என்று நினைப்பதாகவும் கூறுகிறார்கள்.
பனிச்சரிவு பகுதியில் இன்னும் 200 பேருடன் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளதாகவும், உள்ளூர் மீட்புக் குழுக்களின் வழிகாட்டுதலின் கீழ் மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கான மலையேற்ற வீரர்கள் குடாங் நகரத்திற்கு கொண்டு வரப்பட்டதாகச் சீன தொலைக்காட்சி கூறியுள்ளது.
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது கயிறுமேல் நடப்பது போன்றுதான், எந்நேரத்திலும் ஆபத்துகள் ஏற்படலாம், அதனை உணர்ந்தே மலையேறுபவர்கள் அங்குச் செல்கிறார்கள். உண்மையில் எவரெஸ்ட் சிகரத்தில் 330 மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை பனிச்சரிவுகளால் ஏற்பட்டவையே.
அதுமட்டுமின்றி அங்கு நிலவும் கடுமையான குளிரும், மரணங்களுக்கு வழிவகுத்துவிடுகின்றன. பனிப்பொழிவு ஒருபுறம், பனிச்சரிவு ஒருபுறம் என மோசமான காலநிலை நிலவி வரும் நிலையில், மீட்பவர்களுக்குக் கூட இது எளிதான அல்ல.
பாதை அமைக்க அவர்கள் ஒரு மீட்டருக்கு மேல் படிந்துள்ள பனியை அகற்ற வேண்டும்… இதற்காக உள்ளூர் கிராமவாசிகள் மற்றும் வழிகாட்டிகள் மீட்புக்குழுவினருக்கு உதவியாக அங்குத் திரட்டப்பட்டுள்ளனர். எனவே மலையேற்ற வீரர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என எதிர்பார்ககப்படுகிறது.
















