பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை என்றால் சட்டமன்ற தேர்தலில் தங்களது நிலைப்பாடு வெளிப்படும் எனத் தலைமை செயலக ஊழியர்கள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வுதிய திட்டத்தை அமல்படுத்துவோம் எனத் திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் நான்கரை ஆண்டுகள் ஆகியும் அதுதொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு ஓய்வூதிய திட்டம் தொடர்பான குழுவை அமைத்துச் செப்டம்பர் மாத இறுதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
ஆனால் கடந்த 30ஆம் தேதி இடைக்கால அறிக்கையை மட்டுமே ஓய்வூதிய குழு அரசிடம் வழங்கியது. இந்நிலையில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யாததால் அதிருப்தி அடைந்துள்ள தலைமை செயலக ஊழியர்கள் சங்கத்தினர், கருப்பு பேட்ச் அணிந்து பணிக்குச் சென்றனர்.
அப்போது பேட்டியளித்த சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக அரசுக் காலம் தாழ்த்துவதாகக் குற்றம்சாட்டினார்.
இதே நிலை தொடர்ந்தால் தலைமை செயலக ஊழியர்களின் நிலைப்பாட்டைச் சட்டமன்றத் தேர்தலில் வெளிப்படுத்துவோம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.