சொந்த மக்கள் மீது குண்டுவீசி ஒரு நாடு இனப்படுகொலை நடத்தி வருவதாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சித்தார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த திறந்த விவாதத்தின்போது பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ், ஒவ்வொரு ஆண்டும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் அவதூறுகளைக் கேட்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்றும், பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலில் இந்தியாவின் பதிவு கறைபடாதது எனவும் தெரிவித்தார்.
சொந்த மக்கள் மீது குண்டுவீச்சு நடத்தி, திட்டமிட்ட இனப்படுகொலையை நடத்தும் ஒரு நாடு, தவறான வழிகாட்டுதல் மற்றும் மிகைப்படுத்தல் மூலம் உலகை திசை திருப்ப மட்டுமே முயற்சிக்கும் என பாகிஸ்தானை மறைமுகமாகக் குறிப்பிட்டு பேசினார்.
அமைதி காக்கும் படைகளில் பெண்களுக்குத் தலைமைத்துவம் வழங்கி இந்தியா சிறந்த முன்னுதாரணமாக விளங்கி வருகிறது என்றும், இந்திய காவல் பணியின் முதல் பெண் அதிகாரியான கிரண் பேடி, 2003 ஆம் ஆண்டு முதல் பெண் காவல் ஆலோசகராகவும், ஐக்கிய நாடுகள் சபையின் காவல் பிரிவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார் எனவும் குறிப்பிட்டார். மேலும், அமைதி காக்கும் படையில் பணிபுரியும் பெண்கள் அமைதிக்கான தூதர்கள் எனப் பர்வதனேனி ஹரிஷ் தெரிவித்துள்ளார்.