தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 20 ஆயிரத்து 378 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுமென, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடு மற்றும் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம், அமைச்சர் சிவசங்கர் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில், போக்குவரத்துதுறையைச் சேரந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், தீபாவளி பண்டிகைக்காகப் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக 20 ஆயிரத்து 378 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார். அக்டோபர் 16 முதல் 19ஆம் தேதி வரை சென்னையில் இருந்து 14,268 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட நாட்களுக்கு 6,110 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 20 ஆயிரத்து 378 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
தீபாவளி முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக அக்டோபர் 21 முதல் 23ஆம் தேதி வரை 15,129 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். தீபாவளிக்கு இயக்கப்படும் பேருந்துகள் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் புதிய பேருந்து நிலையம் என மொத்தம் 3 இடங்களில் இருந்து இயக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.