தமிழக – கேரளா எல்லையில் உடலில் காயங்களுடன் சுற்றித்திரிந்த மக்னா காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநில எல்லைப் பகுதியில் உள்ள ஆனைகட்டி வனப்பகுதி வழியாகத் தமிழகத்திற்கு யானைகள் இடப்பெயர்ச்சியாகி வருகின்றன.
கடந்த ஒரு வாரமாக உடலில் காயங்களுடன் மக்னா யானை ஒன்று கேரளா வனப்பகுதியில் இருந்து வெளியேறி தமிழக வனப்பகுதியான கூடப்பட்டி பகுதிக்கு வந்தது.
இதனை கண்ட பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் அந்த யானைக்குப் பழங்கள் மற்றும் காய்கறி மூலம் மருந்துகள் வைத்துச் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், மக்னா யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கோவை மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.
இரு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மக்னா யானைக்குக் காயம் ஏற்பட்டதாகவும், உடலில் உள்ள காயங்களுக்கு மருந்து தெளித்து வந்த நிலையில், மக்னா யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாகவும் கூறியுள்ளார்.