தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாகத் தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில், லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் C மற்றும் D பிரிவுப் பணியாளர்களுக்கு மொத்தம் 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உபரி தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் “C” மற்றும் ‘D’ பிரிவுப் பணியாளர்களுக்கு 10 சதவீதம் வரை தீபாவளி போனஸ் வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
நிரந்தர பணியாளர்கள் குறைந்தபட்சம் 8 ஆயிரத்து 400 முதல் அதிகபட்சம் 16 ஆயிரத்து 800 ரூபாய் வரை போனஸாக பெறுவார்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் கருணைத் தொகையாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 69 ஆயிரத்து 439 பணியாளர்களுக்குப் போனஸ் வழங்க 376 கோடி ஒதுக்கீடு செய்ப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.