தருமபுரியில் பெய்த கனமழையால் டிரான்ஸ்ஃபார்மர்கள் பழுதாகி 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கிய நிலையில், மின்சார வசதியின்றி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி பென்னாகரத்தில் அமைந்துள்ள தலைமை மின் அலுவலகத்தில் பல பிரதான டிரான்ஸ்ஃபார்மர்கள் பழுதாகின. டிரான்ஸ்ஃபார்மர்களை பழுதுபார்க்கும் பணி தற்போது வரை முடிவடையாததால், ஏரியூர், பெரும்பாலை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன.
மேலும், பல்வேறு கிராமங்களில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் மின்சார வசதியின்றி கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், மின்வாரிய அதிகாரிகள் தங்கள் செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அப்பகுதி மக்கள், மின்வாரிய ஊழியர்களும் 15 நாட்கள் வரை மின்சாரம் வராது என அலட்சியமாக பதிலளிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், டிரான்ஸ்ஃபார்மர்களில் பழுதை சரிசெய்து உடனடியாக மின்சாரம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.