கோ கலர்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாகச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோ பேஷன் இந்தியா என்ற நிறுவனம், கோ கலர்ஸ் என்ற பெயரில் நாடு முழுவதும் 700க்கும் மேற்பட்ட ஷோ ரூம்களை நடத்தி வருகிறது.
இதில் தமிழகத்தில் மட்டும் 115க்கும் மேற்பட்ட கடைகள் திருச்சி, கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல நகரங்களில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும், தவறான கணக்குகளை காட்டி லாபத்தை வேறு கணக்கில் மாற்றியதாகவும் புகார் எழுந்தது.
அதனடிப்படையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அந்நிறுவனத்தின் உரிமையாளர் வீடு, ஆர்.ஏ.புரம், நுங்கம்பாக்கம், அண்ணா நகர், வளசரவாக்கம், போரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்படும் கோ கலர்ஸ் நிறுவனத்தின் கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாகச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல், சென்னை, கோவை, ஈரோடு, திருச்சி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நகரங்களில் ஒரே நேரத்தில் 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சோதனையில் போது, கணக்கில் வராத தங்கம் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், டிஜிட்டல் பரிவர்த்தனை கணக்குகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.