கோல்ட்ரீப் இருமல் மருந்து விஷமானதால் 15 குழந்தைகள் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில், பயிற்சி பெறாத பணியாளர்களால், 350-க்கும் மேற்பட்ட விதிமீறல்கள் மருந்து தயாரிப்பின்போது நடந்திருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீசென் பாராமெடிக்கல்ஸ் நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிஃப் என்ற இருமல் மருந்து, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த 15 குழந்தைகளின் உயிரைக் குடித்தது, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மருத்துவப் பரிசோதனையில் குழந்தைகளின் சிறுநீரகங்களில் டை எத்திலீன் கிளைகோல் என்ற நச்சு ரசாயனம் இருந்ததே இருமல் மருந்து விஷமாகக் காரணம் எனத் தெரியவந்தது. கோல்ட்ரிஃப் மருந்தில் நச்சுத் தன்மை கொண்ட டை எத்திலீன் கிளைகால் என்ற ரசாயனம் 48.6 சதவிகிதம் அளவில் இருந்ததும், இது பெயின்ட் மற்றும் மைப்போன்ற பொருட்களை தயாரிக்கப் பயன்படும் ஒரு வகை ரசாயனம் என்பதும் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.
ஸ்ரீசென் நிறுவனத்தில் பேட்ச் 13-ல் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் உட்பட 5 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அந்நிறுவனத்தின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டதோடு, கோல்ட்ரிஃப் இருமல் மருந்துக்கு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தடையும் விதிக்கப்பட்டது.
எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நடந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் நாடு முழுவதும் 19 மாநிலங்களில் மத்திய சுகாதாரத்துறை சோதனை நடத்த உத்தரவிட்டது. அதன்பேரில் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத்துறையும் கோல்ட்ரிஃப் தயாரிக்கப்பட்ட நிறுவனத்தில் அதிரடியாகச் சோதனை நடத்தியது.
அப்போது மருந்து தயாரிப்பில் 350-க்கும் மேற்பட்ட விதிமீறல்கள் நடத்திருப்பதும், சுகாதாரமற்ற முறையில் மருந்து தயாரிக்கப்பட்டதும் அம்பலமாகியிருக்கிறது. தொழிற்சாலையில் காற்றோட்டம் மோசமாக இருந்ததும், சேதமடைந்த, துருப்பிடித்த உபகரணங்கள் இருந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.
தொழிற்சாலையில் காற்று கையாளும் அலகுகள் அங்கு இல்லாமல் இருந்ததும் அதிகாரிகளை திக்குமுக்காட வைத்தது. கேஸ் அடுப்புகளில் ரசாயனங்கள் நிறைந்த குடுவைகள் சூடாக்கப்பட்டது, ஓட்டை விழுந்த பிளாஸ்டிக் குழாய்களில் மருந்துகள் கசிந்தது, பயிற்சி பெறாத தொழிலாளர்கள் கையுறைகள், மாஸ்க் எதுவும் அணியாமல் பொருட்களை கலந்தது போன்ற கடுமையான விதிமீறல்கள் மருந்து தயாரிப்பில் நடந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
26 பக்கங்களைக் கொண்ட தமிழ்நாடு அரசு அறிக்கையில், ஆலை அமைப்பு மற்றும் உற்பத்தி பிரிவின் வடிவமைப்பு மாசுபடுத்தும் அபாயங்களுக்கு வழிவகுத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மருந்துகள் தரமாக உள்ளதா என்பதை உறுதி செய்யும் தர உறுதித்துறை இல்லை, உற்பத்தியை மேற்பார்வையிட தகுதி வாய்ந்த வேதியியலாளர்கள் இல்லை என்பதும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசாயன கழிவுகளை நேரடியாகப் பொது வடிகாலில் வெளியேற்றியது எனப் பல விதிமீறல்கள் நடந்துள்ள நிலையில், விசாரணையின் அடுத்தடுத்த பக்கங்கள் பகீர் கிளப்பும் தகவல்களை சுமந்து நிற்கின்றன. மனித உயிர்களை காவு வாங்கும் இதுபோன்ற நிறுவனங்களை வளர விடாமல் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.