அந்தரங்க படங்கள், வீடியோக்கள் இணையதளத்தில் பரவினால் உடனடியாக நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சமூக வலைதளங்கள், ஆபாச இணையதளங்களில் பரவும் தன்னுடைய அந்தரங்க வீடியோக்களை நீக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் பெண்களின் தனிப்பட்ட அந்தரங்கப் படங்கள் பரவுவது அதிகரித்து வருவதாகவும்
பாதிக்கப்பட்டவர்கள் அவற்றை மிக விரைவாக நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
புகார் கிடைத்த 24 மணி நேரத்துக்குள் அந்தரங்க புகைப்படங்களை நீக்க இணையதள நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதைப்பதிவு செய்த நீதிபதி, விசாரணையை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.