காட்பாடி அருகே மழலையர் பள்ளி அமைந்துள்ள கட்டடத்தில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே காங்கேயநல்லூர் பகுதியில் உள்ள கட்டடத்தின் கீழ் தளத்தில் மழலையர் பள்ளியும், முதல் தளத்தில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், முதல் தளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் திடீனெர தீ விபத்து ஏற்பட்டு கரும் புகை வெளியேறியது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெற்றோர் கீழ் தளத்தில் உள்ள மழலையர் பள்ளியில் இருந்து குழந்தைகளை அவசர அவசரமாக அழைத்துச் சென்றனர்.
இந்த விபத்துகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தனியார் நிறுவனத்தில் உள்ள ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகத் தீ விபத்து நிகழ்ந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.