உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளின் பயணத் தேதியை கட்டணம் இல்லாமல் ஆன்லைனில் மாற்றிக் கொள்ளும் புதிய வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது.
ஆன்லைன் மூலம் எடுக்கப்படும் ரயில் டிக்கெட் முன்பதிவில் பயணத் தேதியை மாற்ற விரும்பும் பயணியர், டிக்கெட்டை ரத்து செய்து புதிதாக மீண்டும் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதற்காக ரயில் டிக்கெட்டை ரத்து செய்யும் போது அதற்கான கட்டணம் பிடிக்கப்படுவதால், பயணியருக்கு கூடுதல் செலவும், சிரமமும் ஏற்படுகிறது.
இந்த முறையில் மாற்றம் கொண்டு வர ரயில்வே அமைச்சகம் ஆலோசித்து வந்த நிலையில், தற்போது புதிய திட்டம் வரும் ஜனவரியில் அறிமுகமாக உள்ளது.
அதன்படி, உறுதி செய்யப்பட்ட ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் வைத்திருக்கும் பயணியர், பயண தேதியில் மாற்றம் ஏற்பட்டால் டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு தேதிக்கு மாற்றிக் கொள்ளும் வசதியை ரயில்வே அமைச்சகம் கொண்டு வருகிறது.
இது குறித்து பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வேறு தேதியில் டிக்கெட்டுகள் இருந்தால் மட்டுமே மாற்றம் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மாற்றப்படும் தேதிக்கான ரயில் கட்டணம் கூடுதலாக இருந்தால், அதற்கான வித்தியாச தொகையை மட்டும் செலுத்தினால் போதும் என்றும் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.