இந்திய மக்கள் அனைவரின் நன்மதிப்பை பெற்ற டாடா குழுமத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதல் பேசுபொருளாகியுள்ளது. டாடா நிறுவனத்தின் வளர்ச்சியை அது பாதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. என்ன நடக்கிறது டாடா குழுமத்தில்? பிரச்னைக்கு என்ன காரணம்?. இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
156 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட டாடா குழுமத்தின் தலைவராக இருந்து வந்த ரத்தன் டாடா மறைந்து சரியாக ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. கடந்தாண்டு இதே மாதத்தில்தான் ரத்தன் டாடா உடல்நலக்குறைால் காலமானார். அவரது மறைவுக்கு பிறகு யார் டாடா குழுமத்தைத் திறம்பட வழிநடத்தி செல்வார்கள் என்ற கேள்வி எழுந்தது.
ஓராண்டாகியும் அந்தக் கேள்விக்கு இன்னும் விடை கிடைத்த பாடில்லை. அதுமட்டுமின்றி, உச்சபட்ச அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக டாடா குழுமத்தில் தற்போது அதிகார போட்டியே வெடித்துள்ளது. இதனை சரிசெய்ய முதலில் நலம் விரும்பிகள் சிலர் முயன்றனர். பின்னர், தொழிலதிபர்கள் சமரசம் செய்து வைக்க முன்வந்தனர்.
தற்போது மத்திய அமைச்சர்களே தலையிடும் அளவுக்கு நிலைமை கைமீறியும் சென்றுள்ளது. தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் 66 சதவீத பங்குகளை, டாடா அறக்கட்டளை கைவசம் வைத்துள்ளது.
அந்த அறக்கட்டளையின் தலைவராக ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரரான நோயல் டாடாவும், துணை தலைவராக வேணு ஸ்ரீனிவாசனும் உள்ளனர். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் விஜய் சிங், வழக்கறிஞர் டேரியஸ் கம்பாட்டா, சிட்டி இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரமித் ஜாவேரி, ஜெஹாங்கிர், மெஹ்லி மிஸ்திரி ஆகியோர் அந்த அறக்கட்டளையின் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த உறுப்பினர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து செயல்பட்டு வருவதுதான் தற்போதைய பிரச்னைக்கு மூல காரணமாக அமைந்துள்ளது. ரத்தன் டாடா உயிருடன் இருந்தவரை டாடா அறக்கட்டளையிலும் சரி, டாடா சன்ஸ் குழுமத்திலும் சரி எந்தக் கோஷ்டி பூசலும் ஏற்படவில்லை.
ஆனால், நோயல் டாடா பொறுப்பு வந்த பின்னர் சிலர் அவரது தலைமைக்கு எதிராகக் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். இந்த இரு தரப்பு மோதல் செப்டம்பர் 11ம் தேதி வெளிப்படையாக வெளிஉலகிற்கு தெரிய வந்தது. அன்றைய தினம் டாடா அறக்கட்டளையின் முக்கிய கூட்டம் ஒன்று நடைபெற்றது.
அப்போது, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் விஜய் சிங்கிற்கு மேலும் ஓராண்டிற்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என நோயல் டாடா தெரிவித்தார். ஆனால், அதனை மெஹ்லி மிஸ்திரி, பிரமித் ஜாவேரி, ஜஹாங்கீர், டேரியஸ் காம்பட்டா ஆகிய 4 பேரும் நிராகரித்து விட்டனர். மேலும், மெஹ்லி மிஸ்திரியை நியமன இயக்குநராக நியமிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த இரு தரப்பு பிரச்னைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. எனவே, நோயல் டாடா, வேணு ஸ்ரீனிவாசன், டேரியஸ் கம்பாட்டா ஆகியோரும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரனும் அமித்ஷாவை அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்துள்ளனர்.
அமித்ஷா உடனும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனும் அவர்கள் விரிவான ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் டாடா குழுமம் 4 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது. மேலும், பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளையும் அளித்து வருகிறது.
எனவே, அந்த நிறுவனத்தில் நிலவும் இரு தரப்பு மோதல், மொத்த நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பாதித்துவிடக் கூடாது என மத்திய அமைச்சர்கள் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. மத்திய அமைச்சர்களே நேரடியாகத் தலையிட்டுள்ளதால், டாடா அறக்கட்டளையில் நிலவும் பிரச்னைக்கு விரைவில் சுமூக முறையில் தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.