ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் இன்ஹேலர்களால் அதிகப்படியான காற்று மாசு ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
அதிகரித்து வரும் மக்கள் தொகையும், அதிவேகமான நகர்மயமாதலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்பட்டு வருகின்றன. அவற்றில் முக்கியமானது, காற்று மாசுபாடு. எரிபொருட்களை அதிகளவில் பயன்படுத்துவதாலும், வாகன போக்குவரத்தாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு வாயுக்களாலும், தொடர்ச்சியாகக் காடுகள் அழிக்கப்படுவதாலும் காற்று மாசடைவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், மனிதர்களுக்குப் பல்வேறு உடல்நலப்பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, ஆஸ்துமாவும், நுரையீரல் பாதிப்பும் அதிகளவில் ஏற்படுகின்றன. இத்தகைய பாதிப்புகளால் கடந்தாண்டு ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டும் 7 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த உயிரிழப்புகளை தவிர்க்க, ஆஸ்துமா நோயாளிகள் இன்ஹேலர்களை பயன்படுத்தி வருகின்றனர். MDI எனப்படும் மீட்டர் டோஸ் இன்ஹேலர், SMI எனப்படும் சாப்ட் மிஸ்ட் இன்ஹேலர், DPI எனப்படும் உலர் பவுடர் இன்ஹேலர் என இவற்றில் பல வகைகள் உள்ளன. இந்த இன்ஹேலர்களால் பல லட்சம் மக்களின் உயிர்கள் காக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த இன்ஹேலர்கள் தொடர்பாகக் கலிபோர்னியா பல்கலைகழகம் சார்பில், நுரையீரல் நிபுணர் வில்லியம் பெல்ட்மேன் தலைமையில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீட்டர் டோஸ் இன்ஹேலர்கள் மூலம் மருந்தை நுரையீரலுக்குள் செலுத்த ஹைட்ரோ புளோரோ அல்கேன் என்ற வாயு பயன்படுத்தப்படுகிறது.
இந்த வாயு சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இன்ஹேலர்களால் வெளியான மாசுக்களில், 98 சதவீத மாசு MDI வகை இன்ஹேலர்களால் ஏற்பட்டதாகவும் ஆய்வு முடிவு கூறுகிறது. இவை சுமார் இரண்டரை கோடி மெட்ரின் டன் அளவுக்குக் கார்பனை உழிந்துள்ளதாகவும், இது 5 லட்சத்து 30 லட்சம் பெட்ரோல் கார்களில் இருந்து வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்சைடுக்கு இணையானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
MDI இன்ஹேலர்களுடன் ஒப்பிடுகையில், SMI, DPI வகை இன்ஹேலர்களில் ஹைட்ரோ புளோரோ அல்கேன் வாயுவின் பயன்பாடு இல்லாததால், அவற்றால் எந்த பாதிப்பு் இல்லை எனவும் ஆய்வாளகள் விளக்கம் அளித்துள்ளனர்.
காற்று மாசுபாடால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது. நுரையீரல் பாதிப்பைச் சரிசெய்ய இன்ஹேலர் பயன்படுத்தப்படுகிறது. அந்த இன்ஹேலர்களால் மீண்டும் காற்று மாசு ஏற்படுகிறது. இதுதான் அந்த ஆய்வின் சாராம்சம். இதனை தவிர்க்கக் குறிப்பிட்ட வகை இன்ஹேலர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.