தஞ்சையில் அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை சர்ச்சையான நிலையில் அவசர அவசரமாக சிறிய தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டு வருகின்றன.
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மேம்பாட்டு மானியத்தில் 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய சுகாதார வளாகம் கட்டி கடந்த 6ம் தேதி பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
இதில் கழிவறை குறுக்கே தடுப்புகள் இன்றி கட்டப்பட்டு இருந்ததை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்தனர். இது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி பேசு பொருளாக மாறியது.
இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவின் பேரில் தடுப்புகள் இன்றி கட்டி திறக்கப்பட்ட கழிவறையில் தற்போது சிறிய அளவிலான தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டு வருகின்றன.