இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்டார்.
இந்தியா – இங்கிலாந்து இடையிலான பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் கீர் ஸ்டார்மர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். மும்பையில் வந்திறங்கிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கீர் ஸ்டார்மர் வியாழக் கிழமை பிரதமர் மோடியை சந்திக்க உள்ள நிலையில், இன்று பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்டார். அவருடன் பாலிவுட் நடிகையும், யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் தலைவர் ஆதித்யா சோப்ராவின் மனைவியுமான ராணி முகர்ஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதன்பிறகு ஸ்டூடியோவில் உள்ள திரையரங்கில் கீர் ஸ்டார்மர் திரைப்படம் பார்த்து மகிழ்ந்தார்.
பின்னர் பாலிவுட் சினிமா குறித்து பேசிய இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், பிரிட்டனில் பாலிவுட் சினிமா மீண்டும் திரும்பியுள்ளதாகவும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மூன்று பெரிய படங்களை யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் இங்கிலாந்தில் தயாரிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதன்மூலம் வேலைவாய்ப்புகள் மற்றும் முதலீடுகள் அதிகரிப்பதாக தெரிவித்த ஸ்டார்மர், இங்கிலாந்து உலகத்தரம் வாய்ந்த திரைப்படம் தயாரிப்பதற்கான இடம் என்பதை இது காட்டுவதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.