மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், கைது செய்யப்பட்ட மருந்து நிறுவன உரிமையாளரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய பிரதேச மாநிலம் சிந்துவாரா மாவட்டத்தில் கோல்ட்ரிப் என்ற இருமல் மருந்தை குடித்த பச்சிளம் குழந்தைகள் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெயிண்ட், மை போன்றவை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் டை எத்திலீன் கிளைகால் எனும் நச்சுத்தன்மையுள்ள ரசாயனப் பொருள் இருமல் மருந்தில் அதிகளவு கலக்கப்பட்டுள்ளதால் குழந்தைகளுக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டது ஆய்வில் தெரியவந்தது.
இதையடுத்து தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட் ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மருந்தை தயாரித்த ஶ்ரீசென் பார்மா நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.
கோடம்பாக்கத்தில் வசித்து வந்த மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை சென்னை போலீசாரின் உதவியுடன் மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட ரங்கநாதனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.