அமெரிக்காவில் பாடி பில்டர்கள், தாய்ப்பாலை அதிக விலைகொடுத்து வாங்கும் போக்கு அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தாய்மார்களிடம் இருந்து பெறப்படும் தாய்ப்பால், தசையை வளர்க்கும் சக்தியைக் கொண்டுள்ளதாகச் சில பாடிபில்டர்கள் நம்புகின்றனர்.
இதனால் மாதத்திற்கு ஆயிரக்கணக்கான டாலர்களை செலவு செய்து தாய்ப்பாலை வாங்குகின்றனர். ஆனால் இதற்கு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பசுவின் பால் அல்லது மோரை விடக் குறைவான புரதத்தையே தாய்ப்பால் கொண்டுள்ளதாகவும் தாய்ப்பால் தசை வளர்ச்சியை மேம்படுத்துகிறது என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை எனவும் மருத்துவர் சூட் கூறுகிறார்.
அத்துடன் தாய்ப்பாலை ஆன்லைனில் வாங்குவதால் நோய் பரவுதல் உள்ளிட்ட அபாயங்கள் ஏற்படும் எனவும் மருத்துவர் சூட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூருவை சேர்ந்த மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி கூறுகையில், தாய்ப்பால் என்பது பெரியவர்களுக்காக அல்ல, குழந்தைகளுக்கானது எனவும் தசையை வளர்க்கும் என்று கூறுவது கட்டுக் கதை எனவும் விமர்சித்துள்ளார்.
பெரியவர்கள் ஏற்கனவே செரிமான நொதிகளை உற்பத்தி செய்கிறார்கள்; அவை தாய்ப்பாலில் பல உயிரியல் ரீதியாகச் செயல்படும் கூறுகளைப் பயனற்றதாக ஆக்குவதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.