மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் உணவுப் பொருட்கள் வழங்க ஊழியர்கள் மறுப்பதாகத் தோட்ட தொழிலாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இதனால், அங்கு 4 தலைமுறைகளாகப் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழந்தனர்.
மலைப்பகுதியில் வசித்து வந்த பல தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து சமவெளி பகுதிகளில் கிடைக்கும் கூலி வேலைகளைச் செய்து வரும் நிலையில், மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் தோட்ட தொழிலாளர்களுக்குப் பொருட்கள் தர ஊழியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும், ரேஷன் கடை ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்டேட் தொழிலாளர்கள், மாஞ்சோலை தேயிலை தோட்டம் மூடப்பட்டதால் தங்களுக்கு வரவேண்டிய எந்தப் பணமும் வரவில்லை என்றும், அரசு தரப்பிலிருந்தும் எந்த நிவாரணமும் கொடுக்கவில்லை எனவும் வேதனை தெரிவித்தனர்.
பலருக்கு அரசின் மகளிர் உரிமைத்தொகை கூடக் கிடைக்கவில்லை எனவும கூறினர். எஸ்டேட் முகவரியில் உள்ள தங்களுடைய ரேஷன் கார்டுகளுக்கு ஊழியர்கள் பொருட்கள் வழங்க மறுப்பதாகவும், இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் உடனடியாகத் தலையிட்டு வசிக்கும் இருக்கும் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.