திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவிற்காக நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 22- ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்க உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 27 ஆம் தேதியும், திருக்கல்யாணம் 28ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
இந்நிலையில், கந்த சஷ்டி திருவிழாவின் போது செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதில், பொது சுகாதாரம், குடிநீர் வசதி, மின்சார வசதி, பேருந்து வசதி உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், கந்த சஷ்டி திருவிழாவிற்காக நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், தமிழ்நாடு முழுவதும் இருந்து 400 பேருந்துகள் மற்றும் ஒரு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாகவும் கூறினார்.