தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டையில் இயற்கை முறையில் விளைவித்த சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி ரகங்களை கொண்டு தயாரிக்கப்படும் திண்பண்டங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. தானியங்களின் மூலம் தயாரிக்கப்படும் திண்பண்டங்கள் குறித்தும், உலகளவில் ஏற்றுமதியாகும் அளவிற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு குறித்தும் இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
உணவே மருந்து என்ற வாழ்வியல் நடைமுறையைப் பின்பற்றி நம் முன்னோர்கள் உண்ட ஊட்டச்சத்துமிக்க சிறு தானியங்கள் தான் அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைந்திருந்தது.
காலப்போக்கில் வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்கள் மறையத் தொடங்கிய நிலையில், அதனை மீண்டும் அதிகளவிலான புழக்கத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கிறது புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவனம்.
தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தினை அதிரசம், கவுனி அதிரசம், வரகு மிக்சர், தினை முறுக்கு, கம்பு லட்டு, ராகி லட்டு, எனப் பல்வேறு சிறு தானியங்களின் மூலமாகத் திண்பண்டங்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகையின் போது சிறப்பு விற்பனை நடைபெற்று வந்தாலும் நடப்பாண்டில் சிறு தானியங்களின் மூலம் எட்டு வகையிலான பிஸ்கட்டுகள், மூன்று வகையான தட்டைகள், பூந்தி, லட்டு ஆகியவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வெள்ளைச் சர்க்கரை, செயற்கை சாயம், மைதா மாவு, பதப்படுத்துவதற்கான வேதிப்பொருட்கள் என எந்தவித செயற்கை பொருட்களையும் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
நாட்டுச் சர்க்கரை மற்றும் பனை கருப்பட்டி போன்றவற்றை கொண்டு தயாரிக்கப்படும் திண்பண்டங்களை உண்ணும்போது உடல்நல கோளாறுகள் பெரியளவில் ஏற்படாதுஎனக் கூறப்படுவதால் அதனை வாங்கிச் சொல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இயற்கை முறையில் விளைவிக்கக்கூடிய சிறுதானியங்களை கொண்டு தயாரிக்கப்படும் பலகாரங்கள் தமிழகம் மட்டுமல்லாது கேரளம், அந்திரா, தெலங்கான உள்ளிட்ட அண்டை மாநிலங்களோடு வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இயற்கை விவசாயம் என்பதைதாண்டிச் சுத்தமாகவும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படும் திண்பண்டங்கள் உள்ளூர் மட்டுமின்றி உலகளவிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
















