பெர்ப்ளெக்சிட்டி நிறுவனத்தின் Comet AI வலைதளத்தைப் பயன்படுத்தி ஆன்லைன் வகுப்பை முடித்த இளைஞரை அந்நிறுவனத்தின் CEO அரவிந்த் சீனிவாசன் கண்டித்துள்ள சம்பவம் விவாதமாகியுள்ளது.
அம்ரித் நிகம் என்பவர் Perplexityயின் Comet AI மற்றும் அதனை வடிவமைத்த அரவிந்த் சீனிவாசனை டேக் செய்து எக்ஸ் தளத்தில் 16 விநாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 45 நிமிடங்களில் முடிக்க வேண்டிய ஆன்லைன் வகுப்பு அசைன்மெண்டை ஒரே கட்டளைமூலம் சில நொடிகளில் Comet AI முடித்திருந்தது. இதற்காக Perplexityயின் Comet AI மற்றும் அதன் CEO அரவிந்த் சீனிவாசனுக்கு அம்ரித் நிகம் நன்றி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவரது பதிவை டேக் செய்து “இதை ஒருபோதும் செய்யாதீர்கள் எனக் அரவிந்த் சீனிவாசன் கண்டித்துள்ளார். இந்தப் பதிவு வைரலாகி எக்ஸ் தளத்தில் விவாதப் பொருளாகியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஒருவர், அம்ரித் நிகம் தனது கோர்ஸை முடிக்கவில்லை; கோமெட் தான் கோர்ஸை முடித்ததாகக் கிண்டல் செய்துள்ளார்.
மற்றொருவர் ஆன்லைன் கல்வி தளங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளதாகவும், மாணவர்கள் AI மூலம் சான்றிதழ்களைப் பெறும் நிலை ஏற்பட்டால் ஆன்லைன் கல்வியின் மதிப்பு என்னவாகும் எனவும் வினவியுள்ளார்.